01. கோத்திர பிதாக்கள் | ஜெருசலேம் - தாவீதின் நகரம்

 

 
அறிமுகம்

இன்றைய நாளில் உலகின் முக்கிய மதங்கள் மூன்றின் மையமாக திகழ்வது இஸ்ரவேல் நாடு மற்றும் எருசலேம் நகரம் என்பனவாகும். ஐயாயிரம் வருடங்களுக்கு மேலான ஆதாரங்கள் கொண்டது இஸ்ரவேல் நாடு. பைபிளின் உண்மைத்துவத்துக்கு ஆகச்சிறந்த உதாரணம் 'இஸ்ரவேல்' என்றால் அது மிகையாகாது.

வேதாகமத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதியாகமம் 32:28 ஆம் அதிகாரத்தில் தான் இஸ்ரவேல் என்கின்றதான நாமம் தேவனால் யாக்கோபுக்கு சூட்டப்படுகின்றது. தன்னை ஆசீர்வதிக்க வேண்டி அவன் தேவனோடு போராடினான்.

'தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்'என்று சொல்லி தேவன் அவ்விடத்திலே யாக்கோபை ஆசீர்வதித்து அவனுக்கு 'இஸ்ரவேல்' என்கின்றதான நாமத்தை சூட்டினார். யாக்கோபு தேவனுடன் போராடியதான அவ்விடத்தை 'பெனியேல்' என்று பெயரிட்டான்.

மனிதன் - தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன்


தேவன் படைப்பின் ஆரம்ப ஐந்து நாட்களில் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நட்சத்திர கூட்டங்களையும், நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினங்களையும், பறவைகளையும் இப்படியாக உலகத்தையும், உலகத்தின் மிகுதியையும் உண்டாக்கினார். ஆறாம் நாளிலே இவையெல்லாவற்றையும் ஆளுகை செய்து தேவனை மகிமை படுத்த மனிதனையும் ஆணும், பெண்ணுமாக பூமியிலே உண்டாக்கினார். 

ஆயினும் தேவனால் படைக்கப்பட்ட மனிதர்களோ தேவன் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை புசித்து தேவனுக்கு கீழ்படியாமல் பாவத்தில் வீழ்ந்தனர். இதனிமித்தம் ஏதேன் எனும் மகிமையான தோட்டத்தில் இருந்து தள்ளப்பட்டனர்.

தேவன் படைத்த முதல் மனிதன் ஆதாம். துணையாக ஏவாள். கீழ்ப்படியாமையின் நிமித்தம் இவர்கள் தேவனுடைய சந்நிதியில் இருந்து தள்ளப்பட்டார்கள்.  இதை தான் நாம் ஆதியாகமம் முதல் மூன்று அதிகாரங்களிலே காண்கிறோம். 

ஏதேன் தோட்டத்திலே தேவனோடு கூட நேரடியாக சஞ்சரித்தான் ஆதாம். தேவ மகிமையை இழந்து போனதினிமித்தம் இவர்கள் தேவனை தேடிப் போகவும், அவரை கனப்படுத்தவும் வேண்டுமான ஒரு சூழல் உருவானது.

ஆதாமிற்கு தனது மனைவியாகிய ஏவாள் மூலமாய் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். ஒருவன் காயீன் மற்றவன் ஆபேல். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். காயீன் நிலத்தின் விளைச்கல்களை கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்;.

ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளையும்; கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொடுத்தான்.  தேவன் ஆபேலின் காணிக்கைகளை விரும்பி ஏற்றுக் கொண்டார். இதினிமித்தம் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டு அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனை கொன்று போட்டான். 

எப்படி கீழ்ப்படியாமை ஆதாம், ஏவாளை ஏதேனில் இருந்து துரத்திப்போட்டதோ அதே வண்ணம் காயீன் அவன் சகோதரன் ஆபேல் மேல் கொண்ட எரிச்சல் அவனை அவன் வாழ்ந்த தேசத்தில் இருந்தே துரத்திப்போட்டது.

ஆதாமிற்கு, பின்னும் ஏவாள் மூலமாக சேத் உட்பட வேறு குமாரர்களும் பிறந்தார்கள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்.ஆதாமின் சந்ததி

ஆதாமுக்கு பின்னர் காயீன் மற்றும் சேத் மூலமாக மனுஷர்கள் பெருகினார்கள். அவர்களில் சேத்தின் சந்ததியின் எட்டாவது சந்ததியே 'நோவா'. ஆதாமின் குமாரன் சேத்தின் வம்சத்தில் வந்த லாமேக்குவிற்கு பிறந்த மகன். 

ஆதாமிற்கு பிறகு பூமியில் ஜனத்திரள் வெகுவாய் பெருகிற்று. கூடவே பாவமும். தேவனின் கோபம் ஜனங்கள் மேலே மூண்டது. ஆனாலும் தேவன் கண்களில் நோவாவுக்கு கிருபை கிடைத்தது. ஜனங்கள் தங்களை கெடுத்துக் கொண்டிருக்கையில் நோவா தேவனோடு கூட சஞ்சரித்து கொண்டிருந்தான். 

தேவனுடைய கண்களிலே தயவு கிடைத்த நோவாவிற்கு அவரிடமிருந்து ஒரு கட்டளை பிறந்தது. தேவன் நோவாவை நோக்கி அவனை கொப்பேர் மரத்தால் ஒரு பேழையை உண்டாக்கும் படி கூறினார். தான் பூமியினை ஜலப்பிரளயத்தால் அழிக்கப்போவதையும் முன்னறிவித்தார். நோவா தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தான். பெரிதான ஒரு அழிவை பூமி சந்தித்தது. பூமிக்கு மேலே ஒரு உயிரும் இல்லாதபடி எல்லாமே அழிந்து போனது. நோவாவும் பேழைக்குள் இருந்தவைகள் மாத்திரமே அன்றைய நாட்களில் தப்பின.

நோவாவின் காலத்திற்கு பின்னும் தேவனை மறந்த ஒரு சந்ததி உண்டாயிற்று. இந்த காலத்தில் தான் விக்கிரக ஆராதனை பெருகினது. ஜனங்கள் மெய்தேவனை மறந்து அந்நிய தேவர்களை சேவிக்கிறவர்களாகவும், அதையும் தாண்டி விக்கிரகங்களை உருவாக்கி வழிபடுகிறவர்களாகவும் மாறத்தொடங்கினார்கள். இல்லை. பெருகத்தொடங்கினார்கள்.

பாபேல்


நோவாவின் காலத்திலும் சரி. அவனுக்கு பிற்பட்டதான சில சந்நதிகளின் காலத்திலும் சரி பேசப்படும் மொழியானது ஒன்றாகவே காணப்பட்டது.

பெரும் அழிவுக்கு பின்னான ஜனப்பெருக்கத்தில் தான் 'ஜாதி' மற்றும் 'வம்சம்' என்ற மாபெரும் பிரிவினை உண்டாக தொடங்கியது. தங்கள் தகப்பன் வீட்டார் வம்சமாகவும், முற்பிதாக்களின் வழியே ஜாதிகளாகவும் மாறத்தொடங்கினார்கள். அந்த வண்ணமே தங்களுக்கென நிலத்தை தேடி அடைந்தார்கள். அதாவது பாபேல் உருவாக்கம் வரைக்கும் ஜாதிகளாக பிரிந்து இருந்தாலும் ஜனங்களாக ஒரே கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணி, சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியேறினார்கள். அப்பொழுது அவர்கள், நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் என்று சொல்லி செங்கல் உற்பத்தியை தொடங்கினார்கள்.

நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லி மகா உயர பாபேலின் நிர்மாணத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் வசம் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் இருந்தது. இது தேவ கட்டளைக்கு மாறாக இருந்தது. (ஆதியாகமம் 1:28)

மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் பார்க்க தேவன் இறங்கினார். பார்த்தவர். ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறதை கண்டு ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி போட்டார். ஜனங்கள் பூமியின்மீதெங்கும் சிதறிப்போனார்கள்: அப்பொழுது நகரம் கட்டுகிறதை விடப்பட்டது..

பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்  தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது.

நோவாவின் சந்ததி


வேதாகமத்தை கொண்டு இஸ்ரவேலை அறியும் அதே நேரம் இஸ்ரவேலை சூழ்ந்துள்ள மக்களை குறித்து அறிவது எம்மை இஸ்ரவேல் பற்றிய வரலாற்று நகர்வில் சீராய் நடத்தும். கீழே குறிப்பிடப்பட்ட வரைவு தான் இஸ்ரவேல் சந்ததிக்கு முன்னதான தந்தை, தாய், தாத்தா, பாட்டி சந்ததி ஜாதிகள் எல்லாம்;. இவைகள் தான் இஸ்ரவேல் ஜனத்தை பற்றியதான வேதாகம சரித்திரங்களில் இஸ்ரவேல் ஜனங்களை சூழ்ந்துள்ள இனங்களில் மூத்த குடியினர். தொடர்ந்து வரும் பகுதிகளில் ஆபிரகாம் மூலமான ஜாதிகள், ஏசா மூலமான ஜாதியினர் பற்றியும் பார்க்கலாம்.

நோவாவின் சந்ததியில் சேமின் குடும்பத்தில் இருந்து தான் ஆபிரகாம் வருகிறார். ஆபிரகாமையும், ஆபிரகாமின் சந்ததிக்கும் தொல்லை கொடுக்கும் ஜாதியாக காமின் சந்ததி உருவெடுக்கின்றனர்.

இப்பொழுது ஒரு கேள்வி எழலாம் நோவா மற்றும் பிள்ளைகள் தேவனால் காப்பாற்ற பட்டவர்கள். பின்னர் ஏன் காமின் புத்திரர்கள் ஆபிரகாமின் சந்ததிக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்று. இதற்கு பதிலை கிறிஸ்துவிற்கு இரண்டாயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்னாக சென்றால் நாம் பெற்றுக்கொள்ளலாம். ஆதியாகமத்தின் ஒன்பதாம் அதிகாரம் இருபதாம் வசனத்தை திருப்பி ஒரு சம்பவத்தை அவதானிப்போம். நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டான். வெறியில் தன் கூடாரத்தில் ஆடைகள் விலகப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பன் ஆடைகள் அற்று படுப்பதை கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்.

அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்த போது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து, கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.

யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார் அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான் கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

இப்பொழுது பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன். அடிமையாக வாழ யாருக்கு தான் ஆசை அது தான் கானானியர் எப்பொழுதும் ஆபிரகாமிய மக்களை குடைந்து கொண்டே இருந்தார்கள். ஏன் தேவனுடைய சத்தத்தை கேட்காத கணங்களில் ஆபிரகாமிய மக்கள் கானானியரிடம் தோற்றதும் உண்டு.

நோவாவிற்கு சேம், காம், யாப்பேத் என்று மூன்று குமாரர்கள். தன்னுடைய ஐந்நூறு ஆம் வயதிலே மூன்று குமாரர்களையும் பெற்றுக்கொண்டான் என்று வேதம் சொல்கிறது. (ஆதியாகமம் 5:32)காம்


முப்பது நாடுகள் அல்லது ஜாதியினர் இவன் மூலம் உருவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆபிரிக்காவினை சார்ந்தவர்கள் இவன் சந்ததியாராய் இருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கூறுகின்றார்கள்.

காமிற்கு நான்கு குமாரர்கள். கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்களே அவர்கள்.

பட்டியலின் முதலாமவரின் வம்சத்தை பார்த்தால் கூஷ் எத்தியோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா சார்ந்த கறுப்பினத்தவர்களின் தகப்பனாக அறியப்படுகிறான். மேலும் சில குறிப்புக்களின் படி இலங்கை மற்றும் இந்தியாவில் வாழ்ந்த பூர்வ குடி திராவிடர் கூஷ்ஷின் மூத்த மகன் ஷேபாவின் வம்சத்தாராய் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இரண்டாவது மிஸ்ராயிம், எகிப்து தேசம் இவன் வம்சத்தார் மூலமாக தான் உண்டாகி இருக்கின்றது. வேதத்தில் முக்கிய குறிப்பாக சங்கீதத்தில் குறிப்பிடப்பட்ட 'இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான் யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்' என்கின்ற வார்த்தையை குறிப்பிடலாம். காமின் தேசம் எனும் பொழுது காமின் மகன், மிஸ்ராயிம் வம்சத்தாரே எகிப்தியராக கூறப்படுகிறார்கள். மூன்றாவது பூத், இவன் லிபியா தேசத்தின் தகப்பனாக அறியப்படுகிறான்.

நான்காவது கானான், கானானிலே மொத்தம் 11 கோத்திரங்கள். இருப்பினும் பிரதானமாக அறியப்படுவது ஐந்து தான். ஏனைய 6 கோத்திரங்களும் கானான் என்கின்ற பொதுப்பெயரால் தான் அழைக்கப்படுகிறது.

1. எமோரியர்   

2. ஏத்தியர் 

3. ஏவியர்

4. எபூசியர்

5. கிர்காசியர்

6. சீதோனியர்

7. அர்வாதியர்கள்

8. அமாத்தியர்கள்

9. அர்கியர்கள்

10. சினியர்கள்

11. சேமேரியர்கள்

கானானிய 11 கோத்திரங்கள்

இவர்களில் பிரதானமானவர்களும், பலமுள்ளவர்களுமாய் அறியப்படுகிறவர்கள் எமோரியர் மற்றும் ஏத்தியர் ஆகும். யோசுவா 11 ஆம் அதிகாரத்திலே எமோரியர்கள் திரளாய் பரவியிருந்தார்கள் என்பதை அறியலாம். அதே போல ஏத்தியரும் ஆபிரகாம் காலத்தில் திரளாய் பரவியிருந்ததாக வேதம் சொல்கிறது.

சேம்


நோவாவின் மூத்த குமாரன் சேம். யூதர்களின் பிதாவான ஆபிரகாமின் பிதாக்கள் சேமின் வம்சத்தார் தான். சேமிற்கு ஐந்து குமாரர்கள். ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்களே அவர்கள்.  

நோவாஇவனை ஆசீர்வதிக்கும் போது 'சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.' என்றே ஆசீர்வதிக்கின்றார். குறிப்பிட்டதன் படியே வாக்குத்தத்தமும் நிறைவேறியது. எங்கெல்லாம் சேமின் குடும்பத்தார் பரவினரோ அங்கெல்லாம் கானானியர் அடிமை வாழ்வே வாழ்ந்தனர். பட்டியலின் முதலாமவரின் வம்சத்தை பார்த்தால் ஏலாம்; அரபியாவின் தகப்பனாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இரண்டாவது அசூர், அசிரியர்களின் வம்சத் தகப்பனாகவும், மூன்றாமவன் லூத் லிதியர்;; வம்சத்தார் தான் எனறு கூறப்படுகிறது. நான்காவது ஆராம், இவன் அராமியர்களின், அர்மேனியர்களின், மெசப்போதாமியர்களின், சிரியர்களின்; தகப்பனாக அறியப்படுகிறான்.

இறுதியாக அர்பக்சாத், இவனே ஆபிரகாம் சார்ந்த ஜாதிகளுக்கெல்லாம் தகப்பனாக காணப்படுகின்றான்.யாப்பேத்


14 தேசங்களுக்கு அல்லது ஜாதிகளுக்கு தகப்பனாக யாப்பேத் காணப்படுகிறான். யாப்பேத்திற்கு 7 குமாரர்கள். கோமர், மாதாய், தூபால், தீராஸ், மாகோகு, யாவான், மேசேக் என்பவர்களே அவர்கள்.

யாப்பேத்தின் பிள்ளைகளில் யாவான் கிறீஸ், ரோமன், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் மாகோகு ரஷ்யா, பல்கேரியா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளுக்கும் மாதாய் ஈரான், பேர்சியா, ஆப்கான் போன்ற நாடுகளுக்கும் தீராஸ் ஜேர்மன், ஸ்கேன்டிநேவியன் போன்ற நாடுகளுக்கும் மேசேக் ரஷ்யாவிற்கும் தகப்பன்களாக அறியப்படுகின்றார்கள். 

கிடைக்கப்பட்ட ஆதாரங்கள் மூலமாக இவையெல்லாம் இந்த நவீன கால தேசங்களாக இருக்கலாம் என அனுமானிக்கப்பட்டு வரலாற்று அறிஞர்களால் குறிக்கப்படுகிறது. ஆகவே வேதத்தை தவிர்த்து கூறப்படும் அனைத்து விடயங்களையும் வாசகர்கள் ஆராய்ந்து அறிந்து பின்னரே விசுவாசிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Comments

MY YOUTUBE CHANNEL